Tuesday 15 January 2013

இந்த ஆண்டும் தேர்வு நேரத்தில் மின்வெட்டு அபாயம்.



       கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்த போதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு,
விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும், இதுவரை கல்வித்துறையிலோ, தேர்வுத்துறையிலோ துவங்கவில்லை. கடந்த பொதுத்தேர்வில், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க, ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் எனவும், அதற்கான செலவை, பின்னர் அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டது
                            பெரிய பள்ளிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த ஜெனரேட்டர்களை வைத்து, பள்ளி நிர்வாகங்கள், சமாளித்தன. ஆனால், பெரும்பான்மை பள்ளிகளில், பாதிப்புகள் ஏற்பட்டன.மின்வெட்டு பிரச்னை, விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் எதிரொலித்தது. மின்சாரம் இல்லாமல், பல்வேறு இன்னல்களுக்கு இடையே, ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தினர். வாடகைக்கு ஜெனரேட்டர்களை வாங்கி, தேர்வுகளை நடத்திய பள்ளி நிர்வாகிகள் பலருக்கு, இதுவரை அந்தப் பணத்தை அரசு, திரும்ப தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் பொதுத்தேர்வை நினைத்து, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலங்கிப்போய் உள்ளனர். சென்னையைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில், கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது. "இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை தீர்ந்துவிடும்" என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதில் இருந்து, மார்ச், ஏப்ரலுக்குள் மின் பிரச்னை தீராது என்பது உறுதியாகி உள்ளது. கிராமங்களில், ஒரு நாளைக்கு, 15 மணி நேரம் முதல் 17 மணி நேரம் வரை, மின்வெட்டு இருந்து வருகிறது
                                இரவில், மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 10 தேதிக்குப்பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கு, இப்போது இருந்தே, தீவிரமாக தயாராக வேண்டிய நிலையில், மாணவ, மாணவியர் உள்ளனர். ஆனால், மின்வெட்டு பிரச்னை, மாணவர்களை, பாடாய்படுத்தி வருகிறது. இந்த ஆண்டாவது, முன்கூட்டியே இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, தேவையான முன் ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "தேர்வுக்கு, இன்னும் பல நாட்கள் உள்ளன. தேர்வு நெருங்கும் போது, இந்த விவகாரம் குறித்து விவாதித்து, ஒரு முடிவை எடுப்போம் ' என, தெரிவித்தனர்தேர்வுக்கு இன்னும், 6 மாதங்கள் இருப்பதுபோல், கல்வித்துறையும், தேர்வுத்துறையும் மெத்தனமாக இருந்தால், மாணவ, மாணவியரை பெரிதும் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment