Monday 11 February 2013

குரூப்-1 தேர்வு முறை மாற்றம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு



                          "குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல்
செய்த மனு: முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதுஎழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
                       மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுதேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார். பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.
                             எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாதுஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment