Thursday 7 February 2013

பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடம் வழங்காத நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு



                              விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து
தலைமறைவாக உள்ள பள்ளி நிர்வாகிகளைத் தேடி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில் காமராஜர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கே சிவகாசி கிழக்கு, நாரணாபுரம் ரோட்டைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி சித்ரகலா (25) என்பவர் தற்காலிக இடைநிலை ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இப்பள்ளியில் ஏற்படும் நிரந்த இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் சித்ரகலாவை நியமிப்பதாக உறுதியளித்து 11.7.09-ம் தேதி கருப்பசாமி (50), பள்ளிச் செயலாளர் எஸ்.ஆர்.தங்கராஜ் (45), முன்னாள் செயலாளர் வைரமுத்து (45), முன்னாள் நிர்வாகி மாரியப்பன் (70) ஆகியோர் ரூ.2 லட்சம் பெற்றார்களாம். இது நாள் வரை பணி நிரந்தரம் செய்யாமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் மோசடி செய்துவிட்டதாக சித்ரகலா கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் கருப்பசாமி, செயலாளர் எஸ்.ஆர்.தங்கராஜ், முன்னாள் செயலாளர் வைரமுத்து, முன்னாள் நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment