Sunday 10 February 2013

தேர்வு எழுதப் போகும் மாணவ/மாணவிகளுக்கு தேவையான சில தகவல்கள்!



            படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத் திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள். பொதுவாகவே மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில்
வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவித போராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.
அப்போது உண்ணக்கூடாதது :
              தேர்வை நினைத்தபடியே இருப்பதால் ஏற்படும் குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறதுஎனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டியவை :
          காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய :
                     தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம்அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.
மேலும் தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:
           தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன் உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள். எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்சிலருக்கு விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்

#இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
#மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
#கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
#இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
#ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

#
பொதுவாக காலையில் மனம், தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.இந்த நேரம் நுரைஈரலுக்கான நேரம் என்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
#ஒரு கேள்விக்கானப் பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
#முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
#தேர்வு நடக்கும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக போய் விட வேண்டும்.
#அங்கு அநாவசியமாக அரட்டை அடிக்காமல் அமைதி காக்க வேண்டும்.
#ஹலுக்குள் நுழையும் முன்பு கொஞ்சம் நீர் அருந்து கொள்ளுங்கள்.
இனி எல்லாம் ஜெயமே…!!
 By டாக்டர்.செந்தில் வசந்த்!

No comments:

Post a Comment