தேர்வு நேரத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்காக, "மெடிக்கல் லீவ்' போடுவதால், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில், ப்ளஸ் 2 தேர்வு, இன்று தொடங்கி, மார்ச், 27ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு
தேர்வு, மார்ச், 27ம் தேதி முதல், ஏப்., 12ம் தேதி வரையும் நடக்கிறது. இந்த நேரத்தில், தேர்வுப் பணிக்காக பெரும்பாலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர்களே இருக்கும் நிலை காணப்படும். இதில், ப்ளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோராக உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாதம் வரை மெடிக்கல் லீவ் எடுத்து, குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும், இதுபோன்ற காரணங்களுக்காக, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மெடிக்கல் லீவில் சென்றுள்ளதால், துவக்கப் பள்ளிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றன.இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தேர்வு நேரங்களில் அவசியமான காரணம் இல்லாவிடில், மெடிக்கல் லீவ் அனுமதிக்கக் கூடாது என, அரசின் அறிவிப்பு இருந்தும், தொடக்கக் கல்வியில், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும்; பள்ளிக் கல்வியில், பள்ளியின் தலைமை ஆசிரியர்களும், "சரிகட்டப்' பட்டு, விடுமுறை வழங்கி விடுகின்றனர். தங்கள் குழந்தையின் படிப்புக்காக விடுமுறை எடுக்கும் இவர்கள், மற்ற குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனையளிக்கிறது. தேர்வு நேரத்தில், அதிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நேரத்தில், ஆசிரியர்களுக்கு மெடிக்கல் லீவ் வழங்குவதை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment