Sunday 23 June 2013

நிறைய மதிப்பெண் வேண்டுமா?


                            கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி
தயாராகப் போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, படிப்பு கடினமாக தோன்றுவதற்கு காரணம், தேர்வுகளும் தொடர்ந்து வரும் முடிவுகளும். நமது கல்வி இதுவரை, மதிப்பெண் முறையை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மார்க் அதிகம் எடுத்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு என்ற நிலை உள்ளது. எப்படி படிக்க வேண்டும்:
* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படிக்கம் பழக்கத்தை கடைபிடித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.
* புத்தகத்தை எடுக்கும் போது, புன்னகையுடன் எடுங்கள். புத்தகத்தை விரும்பி எடுத்தால் தான் நீண்ட நேரம் படிக்க தோன்றும். பெற்றோர், ஆசிரியர் வற்புறுத்தலுக்காக, புத்தகத்தை எடுத்தால் நன்றாக படிக்க முடியாது. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தால், அதிக காலம் நினைவில் நிற்கும்.
* சில பாடங்கள் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கும். அவற்றை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள். அது ஆர்வத்தையும், அதிலிருந்து புதிதாக மேலும் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தூண்டும்.
* ஒரு பாடத்தை ஆசிரியர் நடத்தும் முன்பே, வாசித்துப் பாருங்கள், சில பகுதி புரியும்; சில பகுதிகள் புரியாது. புரியாதவற்றை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நீங்கள் புரிந்து கொண்டது சரிதானா என சோதித்துப் பாருங்கள். புரியாதவற்றை ஆசிரியர் நடத்தும் போது அறிந்து கொள்ளுங்கள். ஒரு பாடம் நடத்துவதற்கு முன், அந்த பாடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கு பதில், சில பகுதிகள் தெரிந்து பாடத்தை கவனிக்கும் போது, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். கேள்வி கேட்கவும் தோன்றும்.
* ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு விதமான படிக்கும் முறை இருக்கும். சிலர் நடந்துகொண்டே படிப்பர். சிலர் சப்தமாகவும், சிலர் மனதுக்குள்ளேயும், சிலர் அதிகாலையிலும், சிலர் இரவிலும், சிலர் குழுக்களாகவும் படிப்பர். எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.
* படித்தவற்றை எழுதிப் பாருங்கள். 10 முறை படிப்பது, ஒருமுறை எழுதிப்பார்ப்பதற்கு சமம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதை விட, சிறிது நேரம் விளையாடுவது, சாப்பிடுவது, இசை கேட்பது என செய்து விட்டு மீண்டும் படித்தால், புத்துணர்ச்சியோடு படிக்கலாம்.
* நம்மால் முடியாது, நமக்கு படிப்பு வராது, குறைந்த மதிப்பெண்களே எடுக்க முடியும், என எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்பதற்கு தயங்கக் கூடாது. நன்றாக படிக்கும் மாணவர்களிடமும் சந்தேகத்தை கேளுங்கள். ஒரு பாடம் புரியவில்லை என்றால், விட்டுவிட்டு அடுத்த பாடத்துக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள், எளிதாக புரியும்.
* டிக்ஷனரி பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது வார்த்தை புரியாமல் இருந்தால், விட்டுவிடாமல் அதில் பார்த்துக் தெரிந்து கொள்ளலாம். தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கல்வி ஆண்டின் தொடக்க நாளில் இருந்து படித்தால், ஆண்டின் இறுதியில் கண்டிப்பாக வெற்றிக்கோட்டை எட்டலாம்.

No comments:

Post a Comment