Saturday 22 June 2013

மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை



              பேருந்து நிறுத்தத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றி, இறக்கி செல்லாத அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பள்ளி முதல்வர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்வதிலும், மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் உரிய நடைமுறைகள் பின்பற்றுவதோடு பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.அரசுப் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி மாணவர்களை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தினாலோ அல்லது நிறுத்தாமல் சென்றாலோ அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.இதே போல பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் தனியார் பேருந்துகளின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிக வேகமாக செல்வதாகவும் இதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.இது போன்ற அதிவேக தனியார் பேருந்துகளின் உரிமம் ஒரு வாரகாலத்திற்கு ரத்து செய்யப்படும். இதே புகார் மீண்டும் எழுந்தால் சம்மந்தப்பட்ட பேருந்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.தனியார் பள்ளிகளின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் வேன், பஸ்களில் கண்டிப்பாக பாட்டு கேட்கும் வசதிகள் இருக்கக் கூடாது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதே போல பள்ளிகளில் வாகனங்களை ஓட்டி பழகுவது கூடாது.வாகனங்களை நிறுத்துவதற்கு என்று பள்ளிகளில் வாகன நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த பள்ளிகளுக்கு முன்பாக வேகதடைகள் அமைக்க வேண்டும் என்பதை ஒரு வாரகாலத்துக்குள் டிஎஸ்பிக்கள் அறிக்கை கொடுக்க வேண்டும்.பள்ளி வாகனங்களை இயக்க வயதான ஓட்டுநர்களை பயன்படுத்த கூடாது. மேலும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதே போல காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாணவ,மாணவியர்களை பேருந்துகளில் முறையாக ஏற்றி செல்கின்றார்களா என்பதை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். இதே போல சரக்கு வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .ஸ்ரீதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.சுகுமார், கோபி கோட்டாச்சியர் பழனிச்சாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமணசாமி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment