Thursday 20 June 2013

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்



                             "ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது" என, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார். திருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு
கிராமத்தில், சுவாமி விவேகானந்தர் ஊரக அபிவிருத்தி சங்கம் சார்பில் ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வீர ராகவ ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 ஓராசிரியர் பள்ளிகளுக்கு, சூரிய ஒளி விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற .பி.எஸ்., அதிகாரி நட்ராஜ் வரவேற்புரை ஆற்றுகையில் பேசியதாவது: "ஓராசிரியர் பள்ளி என்ற இத்திட்டம், கடந்த, 2006ம் ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் துவக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடும் இவ்வேளையில், ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் இத்திட்டம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
                        
குழந்தைகள் பள்ளிக்கு வர முடியவில்லை எனில், பள்ளிகளை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என, சுவாமி விவேகானந்தர் கூறியதற்கிணங்க, ஓராசிரியர் பள்ளிகள் கிராமங்களில் துவங்கப்பட்டுள்ளன.

மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இயங்கும் இப்பள்ளியில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது. குறிப்பாக, பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதித்தல், அவர்கள் பேச்சைக் கேட்டு நடத்தல் உள்ளிட்டவை போதிக்கப்படுகிறது. மேலும் இப்பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுவதால், அவர்கள் கல்வியை மட்டும் போதிக்காமல், கல்வி குறித்து அக்கிராமத்தில் விழிப்புணர்வையும், சுகாதாரத்தையும் பேணி காக்கின்றனர். இத்திட்டத்திற்கு, இதுவரை, 1.30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
கல்விச் செல்வம் மூலம், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதோடு, கிராமப்புற மாணவர்களிடையே ஒழுக்கம், படிப்பில் ஆர்வம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது." இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.
                        
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: "ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் மூலம், மாணவர்கள் தங்களுடைய மாலை நேரத்தை, மிகவும் பயனுள்ளதாக ஆக்க வாய்ப்பு கிடைத்துள்ளதுஅத்துடன், அவர்களுக்கு நல்ல பண்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவுகிறதுஇத்திட்டத்தை, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினர். முன்னதாக, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, காரியதரிசி கிருஷ்ணமாச்சாரி பேசுகையில், "2006-07ம் ஆண்டு 150 பள்ளிகளுடன் ஆரம்பித்த இத்திட்டம், தற்போது 580 பள்ளிகளுடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில், 580 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக, 30 மாணவர்கள் என, கிட்டத்தட்ட, 17 ஆயிரம் குழந்தைகள் கல்வி கற்கின்றனர்" என்றார்
.

No comments:

Post a Comment