Thursday 20 June 2013

பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்



         கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும் கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது. கோவையில் உள்ள, அண்ணா பல்கலை
இணைப்பு பெற்ற, கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர் பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனு: "பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மாணவ சமூகத்தினரை திசை திருப்பும் விதத்தில், பல விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. தங்கள் கல்லூரி தான், முதல் இடத்தில் உள்ளது என, பல கல்லூரிகள் கோருகின்றன. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை தான் வெளியிட வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளின் "ரேங்க்" என, இதை கருதக் கூடாது. மேலும், இந்த மதிப்பெண்களை வைத்து, கல்லூரிகளின் தரத்தை முடிவு செய்ய முடியாது.
                             
குறிப்பிட்ட கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுக்க, பல காரணங்கள் அடங்கியுள்ளது. கவுன்சிலிங் நடக்கும் போது, துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த விளம்பரங்களையும், கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடை விதிக்க வேண்டும். தேர்ச்சி சதவீதம் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து, தங்கள் கல்லூரிகளின், "ரேங்க்" பற்றி துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை, கல்லூரிகள் வெளியிட, அனுமதிக்கக் கூடாது." இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவில், "இம்மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை, என, கருதுகிறோம். விளம்பரங்கள் திசை திரும்புவதாக இருந்து, மனுதாரர் பாதிக்கப்பட்டால், சட்டப்படி நடவடிக்கைக்கு கோரலாம்," என்றனர்
.

No comments:

Post a Comment