Friday 12 July 2013

அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் கடந்த ஆண்டைவிட 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கை


        அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1-வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ-மாணவிகள்
அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். முதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதையொட்டி மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், பஸ்பாஸ், கலர்பென்சில்கள், கிரையான்ஸ், புத்தகப்பை முதலியவை வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிளும் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட திட்டங்களால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
             இதுபற்றி தொடக்கப்பள்ளி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:- அரசு மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள், பை, காலணி, பஸ்பாஸ், கலர் பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விலை இன்றி அரசு வழங்கி வருகிறது. அதுவும் பள்ளிகள் திறந்தஅன்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள் முதலியவற்றை வழங்கி வருகிறோம். மேலும் ஆங்கில பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள 837 உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்சேர்க்கையை அதிகரிக்க தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன்காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1-வது வகுப்பில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
                          கடந்த ஆண்டு அரசு தொடக்கப்பள்ளியில் 1-வது வகுப்பில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 947 மாணவ-மாணவிகள் இருந்தனர். இந்த ஆண்டு 4 லட்சத்து 14 ஆயிரத்து 567பேர் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சிகரமாக உள்ளது. வருகிற ஆண்டுகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் விலைஇல்லா திட்டங்கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் சரியாக சென்றடைந்துள்ளது. இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.-

No comments:

Post a Comment