Friday 12 July 2013

குரூப்–2 தேர்வு அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது; 3 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. திட்டம்


               நகராட்சி கமிஷனர், சார்பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம்
சுமார் 3 ஆயிரம் காலி பணி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு உள்ளது.
குரூப்–2 தேர்வு
                                 தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), உதவி வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது. முன்பு நேர்காணல் கொண்ட பதவிகள், நேர்காணல் இல்லாத பதவிகள் இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அண்மையில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி, நேர்காணல் உள்ள பணிகளுக்கு தேர்வு தனியாகவும், நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தனித்தேர்வும் முதல்முறையாக நடத்தப்பட உள்ளது.
3 ஆயிரம் காலி இடங்கள்
                           2013–2014–ம் ஆண்டுக்கான வருடாந்திர காலஅட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான குரூப்–2 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல், நேர்காணல் அல்லாத பணிகளுக்கான குரூப்–2– தேர்வுக்கு இந்த மாதம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இரண்டு தேர்வுகளுக்கான காலி இடங்களும் துறைவாரியாக இன்னும் முழுமையாக பெறப்படாததே தாமதத்திற்கு காரணம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், தலைமைச் செயலகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவி பிரிவு அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் சுமார் 3 ஆயிரம் காலி இடங்கள் இந்த ஆண்டு குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாத இறுதியில் அறிவிப்பு
                குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர்தினத்தந்திநிருபரிடம் தெரிவித்தார். மேலும், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்–1 தேர்வுக்கான காலி பணியிடங்களும் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து ஒவ்வொன்றாக பெறப்பட்டு வருவதாகவும், டி.எஸ்.பி. பதவியில் மட்டும் 30 காலி இடங்கள் வந்திருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment