Thursday 11 July 2013

ஒரே பள்ளிக்கு 2 தலைமையாசிரியர்கள்: பெற்றோர் எதிர்ப்பு


            திருப்பூர் அருகே குப்பாண்டாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை 2 தலைமையாசிரியர்கள் பணியில் இருந்தனர். இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பாண்டாம்பாளையம் அரசு
நடுநிலைப் பள்ளியில் 370 மாணவர்களுக்கும் கூடுதலாக படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக வேல்முருகன் பணியாற்றி வந்தார். இந் நிலையில், திருப்பூர் அருகே முத்தணம்பாளையம் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்த சரஸ்வதி மீது அந்த ஊர்மக்கள் ஏற்கனவே கொடுத்த புகாரின்பேரில் அவரை குப்பாண்டாம்பாளையம் பள்ளிக்கும், தலைமையாசிரியர் வேல்முருகனை முத்தணம்பாளையம் பள்ளிக்கும் கல்வித் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தனர்.
                   அதையடுத்து, குப்பாண்டாம்பாளையம் பள்ளியில் சரஸ்வதி புதன்கிழமை பணியில் சேர்ந்தார். அதே சமயம் வேல்முருகனும் இதே பள்ளியில் இருந்தார். குப்பாண்டாம்பாளையம் பள்ளிக்கு தலைமையாசிரியராக சரஸ்வதியை நியமிக்கக் கூடாது என மாணவர்களின் பெற்றோர் சிலர், பள்ளிக்கு சென்று சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதையடுத்து, சரஸ்வதி கொடுத்த தகவலின்பேரில், தொடக்கக் கல்வி அலுவலர் (திருப்பூர் தெற்கு) .அழகர்சாமி இது குறித்து திருப்பூர் ஊரக போலீஸாரிடம் தெரிவித்தையடுத்து அப்பள்ளிக்கு போலீஸார் சென்று விசாரித்தனர்.
இப் பிரச்னை தொடர்பாக பள்ளியின் கல்விக் குழுத் தலைவரான திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையாசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


                           இதுகுறித்து கிருத்திகாசோமசுந்தரம் கூறியது: கும்பாண்டாம்பாளையம் நடுநிலைப் பள்ளிக்கு, தலைமையாசிரியராக சரஸ்வதி நியமிக்கப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே சரஸ்வதி பள்ளிக்கு போலீஸாரை வரவழைத்துள்ளார். எனவே, அவரது தலைமையில் இப்பள்ளி செயல்படக் கூடாது என பெற்றோர் கூறியுள்ளனர். இன்று பெற்றோர் பள்ளிக்கு சென்று இப்பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்துமாறு கோர உள்ளனர். அதன் பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
                இதுகுறித்து தொடக்கக் கல்வி அலுவலர் .அழகர்சாமி கூறியது: குப்பாண்டாம்பாளையம் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்ற தலைமையாசிரியர் சரஸ்வதியிடம், பெற்றோர் சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸாரை அனுப்பி வைத்தோம் என்றார்
.

No comments:

Post a Comment