Friday 19 July 2013

தகாத வார்த்தைகளில் திட்டிய தலைமை ஆசிரியர்: மனமுடைந்து விஷம் குடித்த பள்ளி ஆசிரியை - நாளிதழ் செய்தி


              பள்ளித் தலைமை ஆசிரியர் கொடுத்த தொந்தரவால் ஆசிரியை ஒருவர் விஷம் குடித்த சம்பவத்தால் தஞ்சாவூரில் பதட்டம் நிலவுகிறது. தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் மேட்டு தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (37) என்பவரின் மனைவி கற்பக வள்ளி (33) துக்காச்சி ஊராட்சி
நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு பவித்ரா (11), ஸ்ரீநிதி (7) என 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பணிக்கு சென்ற கற்பகவள்ளி பள்ளி வளாகத்திலேயே திடீரென விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை , சக ஆசிரியர்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவரம் அறிந்து பதறி ஓடி வந்த அவரது கணவர் இது குறித்து தெரிவித்ததாவது, ‘இந்த பள்ளியில் வேலை பார்க்கும் தலைமை ஆசிரியர் லாடமுத்துபாரதி (47). அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எனது மனைவி என்னிடம் தெரிவித்தார். இது குறித்து கடந்த மே மாதம் 24 - ந் தேதி திருவிடைமருதூர் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் எழுத்து மூலமாக புகார் கொடுத்து உள்ளோம்.
              ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. லாடமுத்துபாரதி ஒரு தேசிய கட்சியில் மாநில பொறுப்பிலும் உள்ளார். அதனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.இந்நிலையில் எனது மூத்த மகள் ஆபரேசனுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தில் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட கேட்டபோது அவர் மறுத்து விட்டார்.இதனால் எனது மகளுக்கு ஆபரேசன் செய்ய வில்லை. அவர் மீது எனது மனைவி ஏற்கனவே புகார் கொடுத்து உள்ளதால், அவர் கையெழுத்து போட மறுத்து, எனது மனைவியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.பள்ளியில் நேற்று எனது மனைவி தியான பாடம் நடத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், எனது அனுமதி இல்லாமல் எந்த பாடமும் நடத்த கூடாது என்று கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த எனது மனைவி கற்பகவள்ளி விஷம் குடித்து விட்டார்' என்றார்

                             இது குறித்து தலைமை ஆசிரியர் லாடமுத்து விடம் கேட்டப்பட்ட போது, ‘ கற்பகவள்ளியும் இங்கு வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரும் எந்த நேரமும் தனியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். பள்ளி தொடர்பாக எது சொன்னாலும் அவர்கள் கண்டுக் கொள்வதில்லை. கற்பகவள்ளியின் மகள் அறுவை சிகிச்சைக்கு பணம் கேட்டு விண்ணப்பித்ததற்கு நான் கையெழுத்து போட மறுத்து ஆபாசமாக திட்டியதாக கூறியது முற்றிலும் பொய்' எனத் தெரிவித்தார். இந்தப் புகார் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், விசாரணைக்கு பிறகு யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே கற்பகவள்ளி நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்து உள்ளார்.

No comments:

Post a Comment