Wednesday 17 July 2013

ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளோர் சேர வேண்டிய ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,



            அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனம், புனே, கொல்கத்தா, மொஹாலி, போபால் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள ஐஐஎஸ்இஆர், பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, 5
வருட இன்டர்ரேட்டட் படிப்பை வழங்குகிறது. BS - MS என்று இப்படிப்பிற்கு பெயர். இப்படிப்பு தனித்துவமான ஒன்று. அடிப்படை அறிவியலுக்கான இப்படிப்பில், மாணவர்கள், இரண்டு பட்டங்களைப் பெறுகிறார்கள். அந்த இரட்டைப் பட்டங்கள், பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., பட்டங்களுக்கு சமமானவை. அதேசமயம், 5 வருட படிப்பையும், முழுமையாக முடித்தப் பிறகுதான் இப்பட்டங்கள் வழங்கப்படும்.
அறிவியல் இல்லாமல் தொழில்நுட்பம் இல்லை
                                  
அறிவியலை அறிந்துகொள்ளாமல், தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது இயலாது. வேலை வாய்ப்பை தேடி ஓடும் சூழல் மக்களுக்கு இருப்பதால், அவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பை பெற்றபிறகு, அவர்கள் தங்களின் பணியில், பெரும்பாலும் திருப்தியடைவதில்லை. நாம் எதை விரும்புகிறோமோ, அதையே மேற்கொள்ள வேண்டும். ஒருவர், பொறியியலை விரும்பினால் மட்டுமே, பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டும். மாறாக, வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பொறியியல் படிக்கக்கூடாது.
அறிவிற்கான தேடல் முக்கியம்
                       
பாடப்புத்தக அறிவை பெறுவதோடல்லாமல், இதர பரந்த அறிவுத் துறைகளிலும் அறிமுகத்தைப் பெற வேண்டியது அவசியம். ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதென்பது, தெரியாததை, தெரிந்துகொள்ளும் ஒரு செயல்பாடேயன்றி வேறில்லை. அடிப்படை அறிவியல் துறைகளை நோக்கி ஈர்க்கப்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் நல்ல பலாபலன்களைப் பெறுவார்கள்.
மாணவர் சேர்க்கை நடைமுறை
                         
மூன்று கட்ட மாணவர் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படுகிறது. 12ம் வகுப்பில்(அறிவியல் பிரிவில்) மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் JEE Advanced தேர்வில் அவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் BS - MS படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கும் INSPIRE உதவித்தொகையைப் பெறக்கூடிய தகுதியுள்ள மாணவர்கள், திறனறி தேர்வில் தேர்ச்சிப் பெறுவதன் மூலமாக, இக்கல்வி நிறுவனத்தில் சேர்க்கைப் பெறலாம். மேலும், KVPY - Kishore Vaigyanik Protsahan Yojana உதவித்தொகை பெறும் தகுதியுள்ள மாணவர்களும், BS - MS படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
சுதந்திரமான பாடத்திட்டம்
                              
இந்த 5 வருட இன்டக்ரேட்டட் படிப்பில் 10 செமஸ்டர்கள் உள்ளன. முதல் 4 செமஸ்டர்களில், மாணவர்களுக்கு, சமஅளவிலான முக்கியத்துவத்துடன் Core courses நடத்தப்படும். முதல் இரண்டு வருடங்களில் Core Courses - படித்து முடித்தப்பிறகு, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றை, அடுத்த 3 ஆண்டுகளுக்கான மேஜர் பாடமாக தேர்வு செய்யலாம். இக்கல்வி நிறுவனத்தில், மேஜர் டிகிரி தவிர, மைனர் டிகிரி பெறும் வாய்ப்புகளும் உள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டம் நெகிழ்வுத் தன்மை உடையது என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். ஒரு மாணவர் தேர்ந்தெடுத்த மேஜர் பாடத்தில் அவருக்கு திடீரென விருப்பமில்லாமல் போய்விட்டால், மூன்றாமாண்டு முடிவடைந்த பின்னரும் கூட, அவர் தனது மேஜர் பாடத்தேர்வை மாற்றிக்கொள்ள முடியும். இதுதான், இப்படிப்பின் மிகப்பெரிய சலுகையாகும்.
ஆய்வக நடவடிக்கை
                     
மூன்றாம் வருடம் முதற்கொண்டு, இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அதிக நடைமுறை அறிவைப் பெறும்பொருட்டு, பயிற்சிகள் அளிக்கப்படும். இங்கே வழங்கப்படும் பிராக்டிகல் பயிற்சி சிறப்பு வாய்ந்தது மற்றும் மாணவர்களை கவரக்கூடியது. நல்ல பயிற்சிபெற்ற பேராசிரியர்களின் உதவியுடன், மாணவர்களுக்கு, சிறப்பான முறையிலான ஆய்வகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆராய்ச்சி ஆர்வமிருந்தால் மட்டுமே...
                       
ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே, IISER -ல் சேர்வது சிறந்தது. ஏனெனில், பெரும்பாலும், தொழில்நுட்ப படிப்புகள் என்பவை, வேலை வாய்ப்புகளுக்காக படிக்கப்படுகின்றன. ஆனால், BS - MS படிப்பு ஆராய்ச்சி தொடர்பானது. ஒரு IISER மாணவர், பிஎச்.டி., அல்லது போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சியை முடித்த பிறகுதான், ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் படித்த மாணவரை ஒத்த சம்பளம் பெறும் நிலையை அடைகிறார்.
பணி வாய்ப்புகள்
                  
இக்கல்வி நிறுவனத்தில், இன்டக்ரேட்டட் படிப்பை முடித்த மாணவர்கள், உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, பிஎச்.டி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆராய்ச்சித் துறை என்பது, இன்றைய காலகட்டத்தில், பணி திருப்தியிலும், சம்பளத்திலும் நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது. பொதுவாக, IISER -களில், ப்ளேஸ்மென்ட் செல்கள் உள்ளன. இதன்மூலம், எளிதான பணிவாய்ப்புகளைப் பெற முடிகிறது. திறமையும், ஆர்வமும் உள்ள IISER பட்டதாரிகள், பல புகழ்பெற்ற நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுவதோடு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இக்கல்வி நிறுவனத்தின் பழைய மாணவர்கள், உலகளவில் பல சிறப்பான நிலைகளை அடைந்துள்ளார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை
.

No comments:

Post a Comment