Tuesday 9 July 2013

"தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட மாணவியரை தேர்வு எழுத அனுமதிக்காத தலைமை ஆசிரியர்" - நாளிதழ் செய்தி



                அரசு பள்ளியில், தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக்காட்ட, பள்ளியில் படித்த சில மாணவியரை, பொதுத்தேர்வு எழுத தலைமை ஆசிரியர் அனுமதிக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தாரமங்கலம் அடுத்த
வெண்ணானம்பட்டியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு, இப்பள்ளியில் 58 மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வின்போது, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, மணிமேகலை, ரம்யா, ஜோதி என்ற மூன்று மாணவியரை தேர்வு எழுத, தலைமை ஆசிரியர் அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அவர்கள், படிப்பில் சற்று மந்த நிலையில் இருந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவியரின் பெற்றோர், எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், தலைமை ஆசிரியர், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அதனால், மூன்று மாணவியரும் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றமடைந்தனர்.
                             
மாணவி மணிமேகலையின் தாயார் சமையா கூறியதாவது: "நாங்கள் தான் படிக்காதவர்களாக இருக்கிறோம், எங்கள் மகளாவது படிக்கட்டும் என்று தான், பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். அவளும் சரியாகத்தான் பள்ளிக்கு சென்றாள். பொதுத்தேர்வில், எங்கள் மகளை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என, தலைமை ஆசிரியர் கூறிவிட்டார். நாங்கள் கண்ணீர் விட்டு அழுதுகூட கேட்டுப்பார்த்து விட்டோம். "முடியாது கிளம்புங்கள்" என்று கூறிவிட்டார். அவளோடு படித்தவர்கள் எல்லாம், தற்போது ப்ளஸ் 1 படிக்கின்றனர். எங்கள் மகள் வீட்டோடு முடங்கிக் கிடக்கிறாள். தலைமை ஆசிரியரால், அவள் படிப்பு பாழாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார். தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் தங்கராஜ் கூறியதாவது: "நான் யாரையும் தேர்வு எழுத வேண்டாம் என்று கூறவில்லை. முதலில் ஐந்து பேர் தேர்வு எழுத வரவில்லை. பின்னர், இரண்டு பேர், மூன்று தேர்வுகளை மட்டும் எழுதினர். மூன்று மாணவியர் தேர்வு எழுதவே வரவில்லை. அவர்கள் வராததற்கு, நான் பொறுப்பல்ல. எல்லாக் குழந்தைகளும், என் குழந்தைகள் மாதிரிதான். இது கிராமப்புற பள்ளி, இதை பெரிதுப்படுத்த வேண்டாம், இதோடு விட்டு விடுங்கள்." இவ்வாறு அவர் கூறினார். சில தனியார் பள்ளிகளில் தான், தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அரசுப்பள்ளிகளிலும், இதுபோன்ற குளறுபடி வேலை ஆரம்பமாகி விட்டதை எண்ணி, பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
.

No comments:

Post a Comment