Thursday 10 October 2013

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு


                         பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சியினாலும்,
போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் 9-ஆம் வகுப்புக்கு வரும் பல மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்புத் திறன் கூட இல்லாமல் வருகின்றனர். இவர்களின் கணிதத் திறனும் மிக மோசமாக உள்ளது. இந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம். எனவே, இவர்களுக்கு உதவுவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இணைப்புப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு இணையாக அவர்களையும் உயர்த்துவதற்காக இந்த இணைப்புப் பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

        அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்புகளில் உள்ள சுமார் 25 சதவீத மாணவர்கள் இந்த சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு பள்ளி நேரத்திலோ, பள்ளி முடிந்த பிறகோ இந்த வகுப்புகள் நடைபெறும். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அடிப்படை மொழியறிவு, அறிவியல் அறிவு மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் விதத்தில் இந்த வகுப்புகள் இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அறிவியல் கண்காட்சிகள்: மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மாவட்டம்தோறும் அறிவியல் கண்காட்சிகளை நடத்தவும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் முடிவு செய்துள்ளது. குறைந்த செலவில் அறிவியல் பரிசோதனைகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment