Thursday 3 October 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


                           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான கேள்வித்தாள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. இதையடுத்து, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும், அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
                 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இதில் 605 தமிழாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் தமிழ்ப் பாடத்தில் பி வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் அச்சுப்பிழைகளுடன் இருந்தன. சாப்ட்வேர் கோளாறால் ஏற்பட்ட இந்த அச்சுப் பிழைகள், கேள்விகளை புரிந்துகொள்வதில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, இதற்கு மறுதேர்வு நடத்தத் தேவையில்லை என வல்லுநர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது.
                         இந்த நிலையில், பிழைகளுடன் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது 40 கேள்விகள் பிழைகளுடன் இருப்பதாகவும், அவற்றுக்கான மதிப்பெண்ணை கழித்துவிட்டு, 110 மதிப்பெண்ணுக்கு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஆனால், இதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி மூன்று யோசனைகளை முன் வைத்தார்.

                          வினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அந்த வினாத்தாளில் தேர்வெழுதியவர்களுக்கு 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும் ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில் ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட 3 யோசனைகளுமே ஏற்புடையதாக இல்லை எனக் கூறி தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment