Tuesday 15 October 2013

"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத்த வேண்டும்"


                  "பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வியறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும்," என, தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து
அறிவுறுத்தினார். தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனை குறித்து, செயல்விளக்க பயிற்சி முகாம், வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சி முகாமை தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து துவக்கி வைத்து பேசியதாவது:

                      "கல்வி முறையில் மாற்றம் நிகழ்வது தவிர்க்க முடியாதது. அதன்படி படைப்பாற்றல் கல்வி முறையில், மாணவ, மாணவியருக்கு பாடங்களை கற்பிப்பதால், எளிதாக பாடம் மனதில் பதியும். தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை, அவ்வப்போது அளவீடு செய்வது அவசியம். இதுகுறித்து பரிசோதனைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் வாசிப்புத்திறன், எழுத்து பயிற்சி திறன் போன்றவற்றையும், மாணவ, மாணவியருக்கு முழுமையாக ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். இத்தகைய திறன்களை அவ்வப்போது ஆய்வு செய்து, அதிகப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் செயல்விளக்க போதனை குறித்த பயிற்சியை, மாணவர்களுக்கு கொண்டு சென்றுசேர்ப்பதன் மூலம், விரிவான, முழுமையான பயன் கிட்டும்." இவ்வாறு அவர் பேசினார். இதில், தஞ்சையைச் சேர்ந்த 44 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். மொத்தம் 40 வகையாக பரிசோதனை குறித்து பல்வேறு துறை ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் தரப்பட்டது.

No comments:

Post a Comment