Saturday 2 November 2013

வெளிநாட்டு பட்டம் பெறுவது இனி எளிதல்ல: யு.ஜி.சி., கடிவாளம்


             அனுமதி இன்றி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொண்டு, இந்திய கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் அமெரிக்க,
இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாட்டு கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும், லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி அந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு, உடனே வேலை கிடைக்கும் எனவும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஏதாவது ஒரு பெயரில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொண்டு நடத்தப்படும் இப்படிப்புகளுக்கு, "மவுசு" இருப்பதாக பெற்றோர், மாணவர்கள் நினைக்கின்றனர். தற்போது, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) இதற்கு கடிவாளம் போட்டுள்ளது.

                    யு.ஜி.சி., செயலர் அகிலேஷ்குப்தா, வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "யு.ஜி.சி., ஒழுங்குமுறைச் சட்டம் 2012" கீழ், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டில், அதிக தரச்சான்று பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே, இந்திய கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்ள முடியும். இந்தியாவில், தேசிய தர நிர்ணய அமைப்புகளால், "பி" கிரேடுக்கும் குறையாத தரச்சான்று பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே, வெளிநாட்டுக்கல்வி நிறுவனங்களுடன், உடன்பாடு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே உடன்பாடு செய்து கொண்ட இந்திய, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், இன்னும் 6 மாதத்தில் இந்த ஒழுங்கு முறை சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இப்புதிய ஒழுங்கு முறைச்சட்டப்படி, எந்த கல்வி நிறுவனமும் தனித்தனியே பெயரை வைத்துக்கொண்டு எந்த வடிவத்திலும் வெளிநாட்டுக்கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்ளக்கூடாது. அத்தகைய உடன்பாடு அங்கீகாரம் அற்றதாக கருதப்பட்டு, அக்கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யு.ஜி.சி., அனுமதி இன்றி இந்த உடன்பாட்டின் கீழ் இந்தியாவில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா பட்டங்களை தரக்கூடாது. உடன்பாட்டில், ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால் இந்திய சட்டப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒழுங்கு முறைச்சட்டத்தின் கீழ், எந்த ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவன உடன்பாட்டையும் யு.ஜி.சி., இதுவரை அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment