''அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கவில்லை. அதிர்ச்சி அளித்துள்ளது'' என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக
தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 26ம் தேதி செய்தித்தாள்களில் ‘தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு: அரசு ஊழியர் சம்மேளனம் வரவேற்பு’ என்ற செய்தி வெளிவந்திருந்தது. மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, திமுக ஆட்சியில்தான் 2009ம் ஆண்டு தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு முன்பே 1989ம் ஆண்டு திமுக அரசு 3வது முறையாக பதவியேற்ற போது, தமிழ்நாட்டில் முதல் முறையாக மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்களுக்கு திமுக அரசுதான் வழங்கியது.
அதேபோல 1996ம் ஆண்டு திருத்தப்பட்ட மத்திய அரசின் ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பிறகுதான் 2006ல் திமுக ஆட்சியில், மத்திய அரசின் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையொட்டி 1.1.2006 முதலே முன் தேதியிட்டு, திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்கள், ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஒய்வு ஊதியம் வழங்கப்பட்டது. ஊதிய உயர்விலே ஒரு சில முரண்பாடுகள் இரப்பதாக அரசு அலுவலர் சங்கங்களின் சார்பில் என்னிடம் கோரிக்கை வைத்தபோது ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அவரின் பரிந்துரையின்பேரில் பல முரண்பாடுகள் திமுக ஆட்சியில் களையப்பட்டன. பின்னர் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மேலும் சில முரண்பாடுகள் இருப்பதாக சில அலுவலர் சங்கங்கள் கூறியதன் அடிப்படையில், அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைபடிதான் ஒரு சில அரசு அலுவலர்களுக்கு ஓரளவு ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டு, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிரு க்கின்றன. இதைத்தான் அனைத்து நாளேடுகளும் வெளியிட்டு இருந்தன.
அறிவிப்பையும், அரசாணைகளையும் முழுமையாக படித்துவிட்டு அடுத்தடுத்த நாள் ஏடுகளில் சிலர் கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் ஊதிய முரண்பாடுகளை களைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள் ளது. 2011 சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தபடி புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி ஆணையாக வெளியிடப்படவில்லை. ஊதியக் குழு பற்றிய அரசு உத்தரவில் ஏமாற்றம் அடைந்த தமிழக ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் மூன்றுகட்டப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் இரவோடு இரவாக ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் வீடு புகுந்து போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலை நீக்கம் செய்ததையும், திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கு வாரி வாரி வழங்கியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், திமுக ஆட்சிதான் அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொற்காலமாக இருந்தது என்பதையும் அரசு அலுவலர்களே நன்றாக அறிவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment