Wednesday, 24 October 2012

பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக, மாணவர்களுக்கான கல்விக் கடனை, வங்கி மறுக்கக் கூடாது' சென்னை ஐகோர்ட் உத்தரவு!



          வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் அனிதா. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், விவசாய வேலை செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு, 92 ஆயிரம், இரண்டாம் ஆண்டு, 74 ஆயிரம், மூன்றாம் ஆண்டு, 74 ஆயிரம், இறுதியாண்டில், 74 ஆயிரம், என, மொத்தம், 3 லட்சத்து, 14 ஆயிரம், கட்டணமாக செலுத்த வேண்டும். ஆம்பூரில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில்,
கல்விக் கடன் கேட்டு, விண்ணப்பித்தார். பள்ளி அளவில், சரியாக படிக்கவில்லை எனக் கூறி, விண்ணப்பத்தை, வங்கி பரிசீலிக்கவில்லை.
              இதையடுத்து, ஐகோர்ட்டில், அனிதா தாக்கல் செய்த மனு: நான், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். என் குடும்பத்தில், முதலாவதாக, பட்டப் படிப்புக்கு செல்கிறேன். கூரை வீட்டில் வசிக்கிறோம். மின்சார வசதி இல்லை. இந்தச் சூழ்நிலையில், கஷ்டப்பட்டு, பள்ளிப் படிப்பை முடித்தேன். கல்விக் கடன் கோரிய, எனது விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்கு, வங்கி கூறும் காரணத்தை ஏற்க முடியாது.கடன் வழங்க மறுத்த, வங்கியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எனக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
                         மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முனுசாமி ஆஜரானார். நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கல்விக் கடன் திட்டம் குறித்த சுற்றறிக்கையை, வங்கியின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், "பள்ளி மட்டத்தில் நன்றாக படித்தால் தான், கல்விக் கடன் வழங்கப்படும்' என, கூறப்படவில்லை. பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடன் வழங்க, எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மெட்ரிக்குலேஷன் தேர்வில், டாக்டர் அம்பேத்கர், 750க்கு, 287 மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தார். அவரது கல்விக்கு, பரோடா மன்னர் உதவினார். தனது பெற்றோர், விவசாயத் தொழிலாளி என்றும், அடித்தட்டில் இருந்து வந்திருப்பதாகவும், மாணவி கூறியுள்ளார். இதை, வங்கி தரப்பில் பரிசீலித்திருக்க வேண்டும்.படிப்பில் சேர, குறைந்தபட்ச தகுதியை, மனுதாரர் பெற்றிருக்கவில்லை, என்பது, வங்கி தரப்பு வாதம் அல்ல. பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர, அவர் தகுதி பெற்றுள்ளார். எனவே, பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடனை, வங்கி மறுக்க முடியாது.
                                  பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்காக, கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய், கடன் பெற, மூன்றாம் நபர் உத்தரவாதம் கூட தேவையில்லை. எனவே, வங்கி மேலாளரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்கு வாரங்களில், கல்விக் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment