பள்ளி, கல்லூரிகள் சேர்க்கைக்காக சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கேட்டு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்கள் குவிகின்றன. சரி பார்த்து சான்றிதழ் வழங்க நடப்பாண்டு கூடுதல் அலுவலர்கள்
நியமிக்கப்படாததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு தாலுகா அலுவலகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியதால், முதல் பட்டதாரி, ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன. வரும் வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாக உள்ளது. மேல்படிப்புக்காக கல்லூரிகளில் சேர்வதற்கும், வங்கிகளில் கல்விக்கடன் பெறவும், கல்வி உதவித்தொகை பெற சான்று கேட்டு, ஈரோடு தாலுகாவில் ஆண்டுதோறும், 30 ஆயிரம் விண்ணப்பங்களை மாணவர்கள் வழங்குகின்றனர். தவிர, மாவட்டத்தில் உள்ள கோபி, சத்தி, பவானி, பெருந்துறை, அந்தியூர் உள்ளிட்ட தாலுகாவில் தலா, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்குகின்றனர்.மாணவர்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து உடனுக்குடன் சான்று வழங்கும் நோக்கில், கலெக்டரின் பரிந்துரையின் பேரில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாகும். மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதத்தில் மூன்று மாதங்கள் கூடுதல் அலுவலர் நியமிக்கப்படுவர். ஈரோடு தாலுகாவில் இளநிலை உதவியாளர், 5 பேர், உதவியாளர், 3 பேர், தலைமையிடத்து துணை தாசில்தார் ஒருவர் என, ஒன்பது பேரையும், பிற தாலுகாவில் கூடுதலாக ஒரு தலைமையிடத்து தாசில்தார் நியமிக்கப்படுவார்கள். ஈரோடு தாலுகாவில் இதுவரையில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். ஆய்வு செய்து விண்ணப்பம் வழங்க வேண்டியவை வாரக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஆனால், இன்று வரையில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவில்லை. இதனால், தாலுகா அலுவலக அதிகாரிகள் சான்றிதழ் வழங்க திணறி வருகின்றனர்.
இதுகுறித்து தாலுகா அலுவலர் கூறியதாவது: பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவுடன், மாணவர்கள் சிரமத்தை குறைக்க, கூடுதல் அலுவலர்களை நியமிக்க கலெகடர் உத்தரவிடுவார்கள். நடப்பாண்டு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியும் நடந்து வருவதால், அலுவலர்கள் பற்றாக்குறையால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மூன்று மாதத்தில், 32 ஆயிரம் சான்றிதழ்கள் வரையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவர்களிடம் சான்றிதழ் கட்டுகளை கொடுத்து, கடந்த வாரம் இரண்டு கட்டு காணாமல் போனது. எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு முடிவுகள் வெளிவரும் முன்பாக, கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment