Friday, 31 May 2013

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலனில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் அனைத்தையும் வாரிசுருட்டினர்-தினமலர்



            தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தால், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, பெரிய அளவில், எவ்வித
பலனும் கிடைக்கவில்லை என்பது, நேற்று வெளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே, மாநில அளவில், அனைத்து இடங்களையும் வாரி சுருட்டினர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, முதல் மூன்று இடங்களை, 198 மாணவர்கள் பிடித்து, வியப்பை ஏற்படுத்திய போதும், இதில், இரண்டு இடம் தான், அரசுப் பள்ளிக்கு கிடைத்துள்ளது. "சென்டம்' எடுத்த மாணவர்களிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பே, மிகவும் அதிகம் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
                              
சமச்சீர் கல்வி அறிமுகம்: கடந்த, 2011 வரை, 10ம் வகுப்பு வரை, ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலில் இருந்தன. இந்த திட்டத்தால், தனியார் பள்ளி மாணவர்களே சாதிக்கின்றனர்; அரசு பள்ளி மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை என, தமிழக அரசு கருதியது. பெரும்பான்மை மாணவர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். மொத்தம் உள்ள, 1.25 கோடி மாணவர்களில், 90 லட்சம் மாணவர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். எனினும், உயர்கல்வி பெறுவதிலும், வேலை வாய்ப்புகளை பெறுவதிலும், இந்த வகை மாணவர்களின் பங்களிப்பு, மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும், நான்கு வகை கல்வி திட்டங்கள், மாணவர்களிடையே, ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதாகவும் கருதி, சமச்சீர் கல்வி திட்டத்தை, முந்தைய தி.மு.., அரசு கொண்டு வந்தது.
                      
இந்த திட்டம், படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பிற்கும் அமலுக்கு வந்தது. தி.மு.., அரசு கொண்டு வந்த பாடத்திட்டம் தரமாக இல்லை என, கூறி, .தி.மு.., அரசு, தரத்தை மேம்படுத்தி, திட்டத்தை அமல்படுத்தியது. இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தால், கிராமப்புற மாணவர்களின், கல்வித்தரம் மேம்படும் என, அரசு எதிர்பார்த்தது. அரசு எதிர்பார்ப்பு, "புஸ்...':ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, சமச்சீர் கல்வி திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்களே, அதிக சாதனை படைத்து வருகின்றனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதல் பொதுத்தேர்வு, கடந்த ஆண்டு நடந்தது. இதில், முதல் இடத்தை ஒரு மாணவர், இரண்டாம் இடத்தை, ஆறு மாணவர், மூன்றாம் இடத்தை, 11 மாணவர்கள் பிடித்தனர். இந்த, 17 மாணவர்களும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். மாநில அளவில், ஒரு இடம் கூட, அரசு பள்ளிக்கோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கோ கிடைக்கவில்லை.
                           
இந்த ஆண்டும் சாதிக்கவில்லை:கடந்த மார்ச் - ஏப்ரலில் நடந்த, இரண்டாம் ஆண்டு தேர்வில், 10.51 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் முடிவை, தேர்வுத்துறை, நேற்று வெளியிட்டது. முடிவை பார்த்த அனைவரும், வியப்பு அடைந்தனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, முதல், மூன்று இடங்களை, 198 மாணவர்கள் பிடித்தனர்.கல்வித்துறை வரலாற்றில், அதிக மாணவர்கள், முதல், மூன்று இடங்களை பிடித்தது, இதுவே முதல் முறை என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 498 மதிப்பெண்கள் எடுத்து, ஒன்பது மாணவர்கள், முதல் இடங்களை பிடித்தனர். 52, மாணவர்கள், 497 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடத்தையும், 137, மாணவர்கள், 496 மதிப்பெண்கள் எடுத்து, மூன்றாம் இடத்தை பிடித்தனர். இந்த சாதனையைப் பார்த்து, கல்வித்துறையே வாயைப் பிளக்கிறது.
                             
அரசு பள்ளி தரப்பில் இரண்டே பேர்...:முதல், மூன்று இடங்களைப் பிடித்த, 198 மாணவர்களில், சேலம் மாவட்டம், ஆத்தூர், அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி, தேவிஸ்ரீ என்பவர், 497 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா, 496 மதிப்பெண்கள் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்தார். மற்ற, 196 பேரும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். தமிழ் அல்லாத பிறமொழியை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில், முதல் இடத்தை, இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை, 17 மாணவர்களும், மூன்றாம் இடத்தை, 65 மாணவர்களும் பிடித்தனர். இவர்கள் அனைவரும், தனியார் பள்ளி மாணவர்கள். ஒட்டு மொத்தத்தில், சாதனை படைத்த, 282 மாணவர்களில், இருவர் மட்டுமே, அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
                    
இது மட்டுமில்லாமல், 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை, 7.14 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களில், தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கணித பாடத்தில், 29, 905 பேர், அறிவியல் பாடத்தில், 38,154 பேர், சமூக அறிவியல் பாடத்தில், 19,680 பேர் என, 87,739 பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர். இதிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பே அதிகம் என, கூறப்படுகிறது.
                      
சமச்சீர் திட்டத்தால் பலனில்லை? இந்த புள்ளி விவரங்கள், சமச்சீர் கல்வி திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பலனடையவில்லை என்பதும், மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே, முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.பாடத் திட்டம் வெளியானபோதே, அவை, மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத் திற்கு இணையாக இல்லை என்றும், தரம் குறைவாக உள்ளது என்றும், பல்வேறு தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மாணவ, மாணவியரும், இதே கருத்தை தெரிவித்தனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, முந்தைய பாடத்திட்டத்தை விட, தற்போதைய பாடத்திட்டம் தரமாக உள்ளது என, கருத்து தெரிவித்தனர். இதை, அரசு பள்ளி ஆசிரியர்களும், ஆமோதித்துள்ளனர். பெரும்பான்மை மாணவர்களான அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, எளிதாக அமைந்ததால், ஒட்டுமொத்த இடங்களையும், அவர்களால் வாரி சுருட்ட முடிகிறது என்பது நிரூபணமாகி உள்ளது
.

No comments:

Post a Comment