Saturday, 25 May 2013

ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?



                 ''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச்
சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி..டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)  நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
                             
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed)  எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.
                               
தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.
                               
ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம். தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.
                      150
வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள். காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி..டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி..டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.
                             
தேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்குhttp://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்
.''

No comments:

Post a Comment