Thursday 27 September 2012

1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு: பள்ளிக் கல்வித் துறை



                 தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின்
விவரங்களும் இதில் தொகுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமையை (EMIS-Educational Management Information System)  முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார்.
கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்கான தகவல் திரட்டுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளில் எத்தகைய தகவல்களைப் பெறுவது, அவற்றை எவ்வாறு பதிவு செய்வது போன்றவை குறித்து செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தொகுக்கப்படும் இந்தப் புள்ளி விவரம் பல நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட பெரியது என்பதால் இதில் பல்வேறு அம்சங்கள் தெளிவாகத் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பணிக்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தனி அலுவலகங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிவாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இதற்கென சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 2 முதல் 5 பேர் வரை பணியமர்த்தப்பட உள்ளனர்.
முதல்கட்டமாக, அடிப்படைத் தகவல்களை மட்டும் தொகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக, பள்ளிக் கல்வித் துறையின் அனைத்துத் தகவல்களும் இணையதளத்தில் சேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் மட்டுமே திரட்டப்படுகின்றன. ஆசிரியர்கள் தொடர்பாக அவர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.
அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி வளர்ச்சி நிதி உள்ளதாகவும், அந்த நிதியிலிருந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு www.tnschools.gov.in  என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும்  (EMIS - Educational Management Information System)  இந்தத் தகவல் திரட்டப்படுகின்றன.
இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகின்றன.

No comments:

Post a Comment