Tuesday 25 September 2012



        ஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு
மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
                   தகுதித் தேர்வில் சில தவறுகளை செய்தவர்கள் அவற்றை சரிசெய்ய வரும் 28-ம் தேதி வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இரண்டாம் தாளில் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் ஏதேனும் ஒரு தாளை அவர்கள் படித்த படிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து எழுதலாம்.
                   இதில் பலர் சமூக அறிவியல் தாள் எழுதுவதற்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், முதல்தாள், இரண்டாம் தாளில் மொழிப்பாடத்தை தவறாகக் குறிப்பிட்டவர்களுக்கும் தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும்.
                      அவர்கள் அன்றைய தினம் குறிப்பிடும் பாடமே அவர்களது மொழிப்பாடமாகக் கணக்கில் கொள்ளப்படும். யார் நேரில் வர வேண்டும்? ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் எழுதுவதற்கு பி.., பி.எஸ்சி., உள்ளிட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டமும், அதன்பிறகு பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
                     இதில் முதல் தாளை எழுதும் தகுதியுடையவர்கள் இரண்டாம் தாள் எழுத விண்ணப்பித்திருந்தாலோ, இரண்டாம் தாளை எழுத தகுதியுடையவர்கள் முதல் தாளை எழுத விண்ணப்பித்திருந்தாலோ அவர்கள் மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் விண்ணப்பிக்கலாம். வரும் 28-ம் தேதி வரை அவர்கள் இந்தத் திருத்தம் செய்யக் கோரி விண்ணப்பிக்கலாம். அதைத் தவிர்த்து, விருப்பப்பாடம், மொழிப்பாடத்தில் திருத்தம் தேவைப்படுபவர்கள் நேரில் வரத் தேவையில்லை. தேர்வு நாளன்று அவர்களுக்கு விருப்பப்பாடம், மொழிப்பாடத்தை சரியாக குறிப்பிட வாய்ப்பு வழங்கப்படும்.
                   6,200 விண்ணப்பங்கள் விற்பனை: ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கு புதிதாக 6,200 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை விற்பனையாகியுள்ளன. ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் 6 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
                 இதையடுத்து, பெரும்பாலான மாவட்டங்களில் காலை 10 மணிக்கு விண்ணப்ப விற்பனை தொடங்கியது. சென்னையில் சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 715 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 32 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதித் தேர்வுடன் ஒப்பிடும்போது, மறுதேர்வுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

No comments:

Post a Comment