Friday 7 September 2012

இளங்கலை மற்றும் முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான தேசிய அளவில் தகுதித் தேர்வுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்



தமிழக அரசின் செய்தி குறிப்பு எண். 529 நாள். 07.09.2012 பதிவிறக்கம் செய்ய...
         பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் சேர நாடு முழுமைக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்று இந்திய பல் மருத்துவக் கழகம் அனுப்பியுள்ள அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய பல் மருத்துவக் கழகம் அனுப்பியுள்ள அறிவிக்கையின் படி, தமிழகத்தில் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே, இந்திய மருத்துவக் கழகம் அனுப்பிய அறிக்கையில், பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி மறுத்ததைப் போன்றுதான், பல் மருத்துவப் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு மறுக்கிறது.
               
தமிழகத்தில் 2005ம் ஆண்டு முதலே தொழிற்கல்வி படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுவிட்டது. நுழைவுத் தேர்வுக்கு ஏழை, எளிய, கிராமப்புர மாணவர்கள் அதிகம் செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி எடுக்க முடியாததால், அவர்கள் நுழைவுத் தேர்வுகளில் பின்தங்கி விடக் கூடாது என்பதால், அவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
             
ஒருபுறம் பயிற்சி வகுப்பு என அதிகமான தொகையை மாணவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் பயிற்சி வகுப்புகளை முடக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு அளித்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வியில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது புதிதாக நுழைவுத் தேர்வு முறை அறிமுகமானால், ஏற்கனவே உள்ள நடைமுறை பாதிப்புக்குள்ளாகும்.
           
எனவே, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறைக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த தேர்வு முறையில் இருந்து தமிழகத்தை விலக்கி வைத்தும், ஏற்கனவே உள்ள சுமூகமான நிலையைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment