Sunday 23 September 2012

பள்ளி மாணவர்கள் சொந்தமாக கட்டுரை எழுத வேண்டும்.கரும்பலகையை பார்த்து காப்பி அடிக்கக்கூடாது.



                       RMSA -சார்பில், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படுவதற்கும் மொழி ஆளுமைத் திறன் வளர்வதற்கும் ஏதுவாக கட்டுரை எழுதும் பயிற்சி நடைமுறையில் உள்ளது. ஆய்வின்போது பல பள்ளிகளில் கட்டுரைகள்
கரும்பலகையில் எழுதப்பட்டு அதை பார்த்து அனைத்து மாணவர்களும் எழுதும் நிலை கண்டறியப்பட்டது. இம்முறை திறன்களை வளர்ப்பதாக அமையாது. கட்டுரைப் பயிற்சி படைப்பு திறனை வளர்க்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
          தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டுரை பயிற்சி அளிக்கும்போது, கட்டுரைக்கான தலைப்பை முதல் நாளே மாணவர்களுக்கு வழங்கி, அதற்கான தயாரிப்புடன் வர வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள்ளோ, பெற்றோருடனோ அல்லது மற்றவர்களுடனோ கட்டுரை தலைப்பு சார்ந்து விவாதிக்க ஆலோசனை வழங்கலாம். மாணவர்களை தனித்தனியாக அமர வைத்து சொந்த நடையில் எழுதுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். ஒரு பக்க அளவில் கட்டுரைகள் இருந்தால் போதும். கட்டுரைகள் முறையாக திருத்தப்பட்டு மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கட்டுரையும் அதிகபட்சம் 10 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மதிப்பெண்கள் புதிய பரிணாமத்தில் படைப்பு மற்றும் கருத்துக்களுக்கு 4 மதிப்பெண், வாக்கிய அமைப்பு மற்றும் நடைக்கு 4 மதிப்பெண், இலக்கணம் எழுத்துப்பிழை மற்றும் பிறமொழி பயன்பாடு தவிர்த்தலுக்கு 2 மதிப்பெண் என வழங்க வேண்டும். கட்டுரை மதிப்பீடு செய்யப்பட்ட பின் மாணவர்களிடம் திரும்ப வழங்கி கண்டறியப்பட்டுள்ள பிழைகள் திருத்தப்பட வேண்டும். சிறந்த கட்டுரைகளை வகுப்பிலும், காலை பிரார்த்தனை கூட்டத்திலும் மாணவர்கள் முன்னிலையில் வாசிக்கச் செய்யலாம்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில், ஒவ்வொரு வகுப்பு நிலையிலும் கட்டுரை ஏடுகளை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி திடீர் ஆய்வின்போது இந்நடைமுறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment