Friday 21 September 2012

கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான சிபிஎஸ்இ பள்ளிகளின் மனுக்கள் தள்ளுபடி



                  தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்விக் கட்ட நிர்ணயக் குழுக்கு எதிராக சிபிஎஸ்இ பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை தமிழக
அரசு நியமித்தது. அதன்படி, நீதிபதி கோவிந்தராஜன், நீதிபதி ரவிராஜ பாண்டியன், ஆகியோர் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு, தனியார் பள்ளிகளுக்கான கடடணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது.
           இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களில் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டுமே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்வி கட்டண நிர்ணயக் குழுவால் கட்டணத்தை நிர்ணயிக்க இயலும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது என உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
            இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, ஆர். சுப்பையா ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, சிபிஎஸ்இ பள்ளிகள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரவில், மாநிலத்துக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணததை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment