Friday 7 September 2012

தினமும் வேண்டும் இறை வணக்கம்!


ரெ.லட்சுமி நாராயணன், ஆசிரியர் (பணி நிறைவு), புதுக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்:
 பள்ளிகளில், காலை இறைவணக்கத்தின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அதன் பின், தேசிய கொடியேற்றி, கொடி பாடலைப் பாடுவர். செய்தி வாசித்தல், திருக்குறள் கூறுதல், பொது அறிவு வினா, விடை கூறுதல், ஆசிரிய, ஆசிரியைகள்,
நீதிநெறிக் கதைகள் கூறுதல், தலைமையாசிரியர், மாணவர்களுக்கு தேவையான அறிவிப்புகளை கூறுதல் போன்றவற்றிற்குப் பின், தேசிய கீதம் பாடி, மாணவ, மாணவியர் அமைதியாக கலைந்து, தங்கள் வகுப்புக்குச் செல்வர். இது தான் இன்று முடிய நடந்து வந்தது. இதற்கு ஆகும் நேரம், அதிகபட்சம், 20 நிமிடமே. இந்த இறைவணக்கத்தால், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும் என்ற எண்ணம், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியரிடம் எழுந்துள்ளது. ஒழுங்கு கட்டுப்பாடு உண்டாகிறது. இறை வழிபாட்டில், ஆசிரியர், ஆசிரியை, மாணவ, மாணவியர் ஒன்று கூடுவதால், ஒருவரையொருவர் சந்தித்து கொள்ள முடிகிறது. அன்றாட செய்திகள், திருக்குறள் அதற்கான பொருளை தெரிந்து கொள்ள முடிகிறது. பொது அறிவு வினாவிற்கான பதிலை, அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வருவது, தலையை சீவி நாகரிகமாக வருவது, ஒன்றாக சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுதல் போன்ற நற்பண்புகள் உண்டாகின்றன. தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியருக்கு கூற விரும்பும் செய்திகளை அறிவிப்பாக வெளியிட முடிகிறது. ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பள்ளிக்கு தாமதமாக வந்தாலும், அவர்களது வருகையை காட்டிக் கொடுத்து விடும். இத்தகைய நற்பண்புகள் கொண்ட இறை வணக்கத்தை, இனி, வாரத்தில் ஒரு நாளாக, திங்கட்கிழமை மட்டும் நடத்தினால் போதும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது, வேதனைக்குரியது, வருந்ததக்கது, வெறுக்கத்தக்கது. இதனால், ஆசிரிய, ஆசிரியை, மாணவ, மாணவியர் தாமதமாக வந்து நேராக வகுப்புக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, கல்லூரியைப் போல், மாணவ, மாணவியர் எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்ற அவல நிலை ஏற்படும். எனவே, தொன்று தொட்டு நடைபெற்று வரும் இறைவணக்கம், நாள்தோறும் நடைபெற வேண்டும்.

No comments:

Post a Comment