Sunday 2 September 2012

தேர்வு மையத்திற்கு ஆன்-லைனில் வினாத்தாள்: டி.என்.பி.எஸ்.சி


             வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு
நேரடியாக அனுப்பப்பட்டது.
              சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணிக்கான தேர்விற்கு வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிட்டுக் கொடுக்காமல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தேர்வு மையத்திற்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது.
        கம்ப்யூட்டர் கிளவுட் டெக்னாலஜி என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அனுப்பப்பட்ட வினாத்தாள், பின்னர் தேர்வு மையத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வர்களுக்கு விநியோகப்பட்டது.
       நூலகர் தேர்வை தொடர்ந்து, இனி படிப்படியாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகங்களில் ரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மற்றும் தாலுகா கருவூலங்கள் வழியாக தேர்வு மையங்களைச் சென்றடையும்.அவ்வாறு செல்லும்போது இடையில் வினாத்தாள் கட்டுகளை பிரித்துப் பார்க்கவும் அதன் மூலம் வினாத்தாள் அவுட் ஆகவும் அதிக அபாயம் உள்ளது.
      தற்போதைய புதிய முறையில் ஆன்லைனில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கு சென்றுவிடுவதால் கேள்வித்தாள் அவுட் ஆகும் பேச்சுக்கே இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பல்கலைக்கழகங்களில் இதுபோன்றுதான் ஆன்லைன் மூலமாக வினாத்தாள் அனுப்பப்பட்டு, பின்னர் பிரிண்ட் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
        அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி குரூப் 2 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனது. இதையடுத்து, குரூப்2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment