Friday 23 November 2012

10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு



             பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி... தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளில் உள்ள 3,220 காலி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 4,838 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாள் கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
                           
ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் துறை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். இந்த கவுன்சிலிங் டிசம்பர் 1–ந் தேதி வரை வேலை நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக கவுன்சிலிங் பணிகளை பார்வையிட்ட நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:– கிராம நிர்வாக அதிகாரி (வி...) பதவியில் 1,870 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். வி... தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். அதேபோல், கடந்த 4–ந்தேதி நடந்து முடிந்த குரூப்–2 தேர்வு முடிவை அடுத்த மாதம் (டிசம்பர்) 2–வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
ஜனவரியில் தேர்வு அட்டவணை
                          
ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் வெளியிடப்படும்? என்று முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடும் முறையை டி.என்.பி.எஸ்.சி. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தியது. அதன்படி போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக துறை வாரியாக காலி இட விவரங்களை கேட்டுப்பெற்று வருகிறோம். தேர்வு அட்டவணையை ஜனவரி மாதத்தில் வெளியிட்டு விடுவோம்’’ என்றார்.
                         
குருப்–1 பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு டிசம்பர் மாதம் 30–ந்தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. ஆனால், அதே தேதியில் யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. மாற்றியமைப்பது வழக்கம். இதுகுறித்து நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘ குரூப்–1 முதல்நிலைத்தேர்வு தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம்’’ என்று கூறினார்
.

No comments:

Post a Comment