Tuesday 27 November 2012

எம்பிபிஎஸ் தேர்வுக்கு புதிய மதிப்பெண் முறை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்



         எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்து இருந்த புதிய தேர்வு மதிப்பெண் முறையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளை வகுத்து இருந்தது.
                          இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எம்பிபிஎஸ்
முதலாமாண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதையடுத்து தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். bபுதிய விதிமுறைகள் உருவாக்குவதற்கு தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்திய மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கனவே வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
                             இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், பி.எஸ். சிவஞானம் தலைமையிலான நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச், முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில், புதிய விதிமுறைகளை ஏற்கனவே நடந்த தேர்வுக்கு அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும்வரும் ஆண்டுகளில் இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அதனை பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் வைத்தனர். இந்த உறுதி மொழியை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், கடந்த ஆகஸட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை இந்திய மருத்துவக் கவுன்சில் தேர்வு முறையின் அடிப்படையில் மதிப்பிட்டு  விரைவில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment