சத்துணவு திட்டத்தில் வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோர் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கையை அதிகரிக்க, 1982ல் சத்துணவு திட்டத்தை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், ‘சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன்
கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்கப்படும். 4 வகையான முட்டை மசாலாக்களும் வழங்கப்படும்’ என்று கடந்த 2ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு வருகிறது. புதிய வகை சமையல் செய்வது குறித்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பிரபல சமையல் கலைஞர்களால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல சமையல் கலைஞர் தாமு தலைமையிலான குழுவினர் மதுரை மண்டலத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஓட்டல் சென்டர் பாயின்ட் சென்னை நிறுவன தலைமை சமையல் கலைஞர் கண்ணன், எம்பி இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் சத்தியநாராயணன் தலைமையிலான குழுவினரும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களின் சமையல் கலைஞர்களும் மாவட்டங்களில் முகாமிட்டு சமையல் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும் முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது. முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அங்கன்வாடிகளில் திங்கள் கிழமைகளில் தக்காளி சாதம், வேக வைத்த முட்டை செவ்வாய் கிழமைகளில் கலவை சாதம், சுண்டல், புதன் கிழமைகளில் காய்கறி புலவு சாதம், வேக வைத்த முட்டை, வியாழக்கிழமைகளில் எலுமிச்சை சாதம், வேக வைத்த முட்டை, வெள்ளிக்கிழமைகளில் பருப்பு சாதம், வேக வைத்த உருளை கிழங்கு, சனி மற்றும் ஞாயிறுகளில் கலவை சாதம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment