அரசு உதவிபெறும் தனியார், சிறுபான்மை பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற முன் தேதியிட்ட உத்தரவு காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 2 முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துள்ளது. முதல் தேர்வு எழுதியதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். 2வது
முறையாக நடந்த மறுதேர்வில் முதல் தாளில் 10,397ம், 2ம் தாளில் 19,246 பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்துவிட்டது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1:30 என்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தற்போது 1:40 என்ற அடிப்படையில் ஆசிரியர் & மாணவர் விகிதம் உள்ளது. புதிய ஆசிரியர் & மாணவர் விகிதம் வரும் 2013 ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தகுதியான ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் வருங்காலங்களில் தேவை உள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஓய்வு பெறுகின்றவர்களால் ஏற்படும் காலியிடம், பதவி உயர்வு பெறுகின்றவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பணியிடங்கள் என்று ஆயிரக்கணக்கான காலியிடங்கள் உருவாகிறது.இவை ஒருபுறம் இருக்க தமிழக அரசின் கல்வித்துறை அரசாணைப்படி அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23.8.2010க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் முன் தேதியிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசாணை வெளியாவதற்கு முன்பு பணி நியமிக்கப்பட்ட கல்வி தகுதியுடைய தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ஏற்பளிக்கப்படாமல் ஊதியம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2010 முதல் 2 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வால் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தகுதி தேர்வில் மிக குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களே இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலை உள்ளது. ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெறுகின்றவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியராகவே விரும்புகின்ற நிலை உள்ளதால், அரசு பள்ளிகளில் அதற்கு தேவையும் உள்ளதாலும் தனியார் பள்ளிகளை நாடும் ஆசிரியர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் தனியார் பள்ளிகளில் தேவை உள்ளது. இதை எவ்வாறு நிரப்புவது என்ற கேள்விக்குறி தனியார் பள்ளிகளுக்கு எழுந்துள்ளது.5 ஆண்டு அவகாசம் வேண்டும்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக ஜான் உபால்ட் கூறியதாவது: அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் கல்வி தகுதியுடைய ஆசிரியர் களை நியமித்து அவர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று எழுத்து பூர்வமான உறுதிமொழியை பெற்றுக் கொண்டு பணி நியமனம் ஏற்பு வழங்கி ஊதியம் வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment