Tuesday 6 November 2012

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 22ல் ஆசிரியர்கள் பேரணி



              தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறியதாவது: மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போல தமிழகத்திலுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு அதே தேதி
முதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யாத நிலையில் இரண்டு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட்டும் தேவையான ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியாத நிலையே உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
                   1988ம் ஆண்டுக்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை ஊதிய நிர்ணய விதிகள் 2009ல் விதி 5 நடைமுறைப்படுத்தி உள்ள அரசாணையின் படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் கணக்கிட்டு பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
            அடுத்த கட்டமாக வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட உள்ளது. ஜனவரி 5ல் மாநில அளவில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும் நடைபெறும். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment