Tuesday 13 November 2012

பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மதிப்பெண் சலுகை கோரி மனு தாக்கல்


            பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும்
பிஎட், பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 57.33 சதவீதம், இரண்டாம் தாளில், 57.33, சதவீதம் பெற்றேன். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனக்கு அனுப்பப்படவில்லை.
        இடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன. 8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்.
        எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்ததுமனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்நீலகண்டன் ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment