Tuesday 20 November 2012

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லையா? களம் இறங்க வருகின்றனர் "அன்னையர் குழு'



                            பள்ளிகளை மாணவ, மாணவியரின் தாய்மார்கள் நேரடியாக ஆய்வு செய்யும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் "அன்னையர் குழு' என்ற புதிய
அமைப்பு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 34 ஆயிரத்து 180 தொடக்கப்பள்ளிகளும், ஒன்பதாயிரத்து 938 நடுநிலைப்பள்ளிகளும், நான்காயிரத்து 574 உயர்நிலைப்பள்ளிகளும், ஐந்தாயிரத்து 930 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 54 ஆயிரத்து 622 பள்ளிகள் உள்ளன. பல லட்சம் மாணவ, மாணவியர்
இப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் என்று கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பள்ளி செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்வர்.இந்நிலையில் பள்ளிகளை அங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் தாய்மார்கள் ஆய்வு செய்யும்
வகையில் "அன்னையர் குழு' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வகுப்புகளை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு
பரிவில் இருந்தும் ஒருவர் வீதம் ஐந்து தாய்மார்கள் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பர். அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், 6ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும் பிரதிநிதியாக இருப்பர். இவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இக்குழு வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, நூலகம், கம்ப்யூட்டர் வசதி, மைதானம் என அனைத்து வசதிகளையும் பார்வையிட்டு அதற்கான பார்வை புத்தகத்தில் விவரங்களை பதிவு செய்வர். அன்னையர் குழுவினர் பார்வையிட்டு குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடும் குறைபாடுகளை சரிசெய்ய பள்ளி தலைமையாசிரியர், செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை விபரங்களை பார்வை புத்தகத்தில் பதிவு செய்து அவர்கள் கையொப்பம் இடவேண்டும். இக்குழுவினர் பள்ளியை பார்வையிடும் போது பள்ளி தலைமையாசிரியரோ அல்லது அவரது பிரதிநிதியோ உடன் இருக்கலாம். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
.

No comments:

Post a Comment