Saturday 10 November 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நவம்பர் 14 முதல் காலவரையின்றி மூடல்!


                         சிதம்பரம்: ஊதியக் குறைப்பு மற்றும் பணியாளர்கள் குறைப்பு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் 14ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து தீபாவளி விடுமுறைக்குப் பிறகு வரும் 14 தேதி முதல் பல்கலைக்கழகத்துக்கு
காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
                     கடும் நிதி நெருக்கடியில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை நீக்கவும், ஊதியத்தைக் குறைக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஊதியக் குறைப்போ, ஊழியர் குறைப்போ செய்ய மாட்டோம் என நிர்வாகம் உறுதி மொழி தர வேண்டும் என்று கூறி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் 14ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
                     இந் நிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் வெளி்யிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர்  14ம் தேதி திறக்கப்பட இருந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை வகுப்புகளும் திரும்ப திறக்கப்படும் தேதி காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ம் தேதி முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக செயல்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் விடுதி அறைகளை நவம்பர் 12ம் தேதி மாலைக்குள் காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்க வேண்டும்-ராமதாஸ்:
                      இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் நிர்வாகக் குளறுபடிகள் தான் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிகிறது. நிதி நெருக்கடியை சமாளிப்பது குறித்து கடந்த 7ம் தேதி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் துணைவேந்தர் ஆலோசனை நடத்தியுள்ளார். நிதி நெருக்கடியை சமாளிக்க 4,500 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும், மீதமுள்ள ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
                    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடிக்கு அதன் ஆசிரியர்களோ, மற்ற பணியாளர்களோ எந்த வகையிலும் காரணம் அல்ல. பல்கலைக்கழகத்தை பொன் முட்டையிடும் வாத்தாக கருதிய நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள் தான், ஒரு காலத்தில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமாக இருந்த அண்ணாமலை பல்கலைக் கழகத்தை இன்று இந்த அவலநிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்த போதிலும், பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக, விருப்பம் போல ஆட்களை பணியமர்த்தி வந்தது.
14,000 மாணவர்கள், 14,000 ஊழியர்கள்-ஆசிரியர்கள்:
                           கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளில் மொத்தம் 7,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பணியமர்த்தியிருக்கிறது. இதனால் தற்போது 14,000 மாணவர்கள் பயிலும் அந்த பல்கலைக்கழகத்தில் 14,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பதிலிருந்தே பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்பட்டிக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும். தவறு முழுவதும் நிர்வாகத்தின் பக்கம் இக்கும் நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி 4,500 பேரை ஆட்குறைப்பு செய்வதோ, மற்ற ஊழியர்களின் ஊதியத்தை 50% குறைப்பதோ முறையற்றதாகும். இதனால் அனைத்துப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பாடம் நடத்த தகுதியுடைய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, பல்கலைக்கழகத்தில் முறைசார்ந்த கல்வி பயிலும் 14,000 மாணவ மாணவியரும் , தொலைவழிக் கல்வி முறையில் பயிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கபடுவார்கள்.
         எனவே, ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு முடிவை கைவிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். இதை நிர்வாகம் ஏற்காவிட்டால், சிறப்பு சட்டம் கொண்டு வந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொண்டதை போல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இந்தப் பல்கலைக்கழகம் முழுக்க, முழுக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் தான் நடத்தபடுகிறது என்பதால் தமிழக அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, அதை அரசுடைமையாக்க தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment