Thursday, 31 January 2013

பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்



       பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,048 ஆக அதிகரித்துள்ளது. பள்ளிகளின் மூலம் 8.01 லட்சம் பேரும்,
தனித்தேர்வர்களாக சுமார் 50 ஆயிரம் பேரும் என மொத்தமாக 8.51 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட சுமார் 30 ஆயிரம் பேர் இந்த ஆண்டு கூடுதலாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 1,974 தேர்வு மையங்களில் 8.22 லட்சம் பேர் எழுதினர்.
                        இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதுவதையொட்டி, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு கூடுதலாக 70 தேர்வு மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்கும்போது அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு 2,500 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத்தேர்வு எழுத உள்ளவர்களில் 4 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment