அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளைச் செயலாளர் ராமராசு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கல்வியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு
நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஜாமிண்டரி பாக்ஸ், அட்லஸ் மேம்ப், நோட்டுப் புத்தகம், சீருடை மற்றும் லேப்டாப், சைக்கிள், உதவித் தொகை போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு ஆண்டும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதாக, பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட எருமப்பட்டி வட்டாரக் கிளை செயலாளர் ராமராசு கூறியதாவது:
கடந்த, 2007ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை இல்லை. குறிப்பிட்ட நிலையை மாணவர்கள் கடந்தால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். இதன்மூலம் மாணவர்களது வாசிப்பு திறன் குறைந்தது. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், கிராமப் புறங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். தற்போது, புத்தக வழி முறை இருந்தாலும் செயல்வழிக் கற்றல் உபகரணங்களும் துவக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இது துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த, மாணவர்களுக்கு கல்வி உபகரணம் முதல் உதவித் தொகை வரை பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன், கிராமப்புற பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த நடைமுறை இல்லை. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். மேல்நிலைக்வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment