Wednesday, 23 January 2013

தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு: "ஸ்மார்ட் கார்டு' பதிவேற்றும் பணியில் கணினி ஆசிரியர்கள்



             மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள் பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தேர்ச்சி  விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக,
ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஸ்மார்ட் கார்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், பெற்றோர் பெயர், வருமானம், ரத்த வகை, சகோதர, சகோதரிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இத்தகவல்களை, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளத்தில், பதிவேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான, அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டு உள்ளது. அவை பல இடங்களில் செயல்படுவது இல்லை. மேலும், தேர்தல் நேரங்களில், வாக்காளர்களை கண்காணிக்க, பள்ளி மடிக்கணினிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது அவற்றின், செயலாக்க மென்பொருள் அழிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பின் அவைஅப்படியே பள்ளிகளுக்குஅனுப்பப்படுகின்றன. பல பள்ளிகளில் கணினி இருந்தாலும், இணைய வசதி இருப்பதுஇல்லை. கூடுதல் கட்டணத்தில், டேட்டாகார்டு மூலமாக, சில இடங்களில் இணைய வசதிகளை ஏற்படுத்தி பள்ளி சம்பந்தப்பட்ட பணிகளைமேற்கொள்கின்றனர். கணினி, இணையம் உள்ளிட்டவசதிகள் உள்ள, பள்ளிகளில் மின்தடை நேரங்களில், கணினியை பயன்படுத்த, இன்வெர்ட்டர் இல்லை. இந்நிலையில் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், தனியார் இணைய மையங்களில், பள்ளியின் கணினி பணிகளை மேற்கொள்கின்றனர். தனியார் கல்லூரிகளில், பள்ளிகளில், இதுபோன்ற கணினி வசதி குறைபாட்டால், திருத்தணி மற்றும் பொன்னேரியில் உள்ள, தனியார் கல்லூரி வளாகங்களில், ஸ்மார்ட் கார்டு தகவல் பதிவேற்றும் பணி, பள்ளி கணினி ஆசிரியர்களை கொண்டு மேற்கொள்ள ப்படுகிறது. செய்முறை தேர்வு பாதிப்பு நேற்று முன்தினம் முதல், நடந்து வரும் இந்த பணியில், திருத்தணி கல்லூரியில் - 57 பள்ளி கணினி ஆசிரியர்களும், பொன்னேரி கல்லூரியில் - 83 பள்ளி கணினி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வரும் ஜன., 31ம் தேதிக்குள் பணியை முடிக்க உத்தரவு இடப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம் (பிப்ரவரி) செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், கணினிஆசிரியர்கள், தகவல் பதிவேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார் படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிடவிரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சில மாதங்களாக மாணவர்களின் ஜாதி சான்றிதழ், ஆசிரியர்கள் விவரம், விலையில்லா மடிக்கணினி போன்ற தகவல்கள், கணினியில் பதிவேற்றும் பணியை செய்தோம் என்றார். மேலும் தற்போது தேர்வு நேரத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்யும்பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.இதனால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியவில்லை. தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது. என்றார். வேறு வழி இல்லை இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு குறித்த பதிவேற்றப் பணி, ஜன., 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவு இட்டு உள்ளது. அதன்படி, இப்பணிகள் நடந்து வருகிறன. தற்போது, இப்பணிகளை செய்யாவிட்டால், பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுதேர்வு, விடைத்தாள் திருத்தும் பணி என, தொடர்ச்சியாக பணி உள்ளது. எனவே, ஒரு வாரத்திற்குள் இப்பணியை விரைந்து முடித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார். சர்வர் பழுதால் பணி தாமதம் மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றும் பணி முழுவதும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் நாளொன்றுக்கு, 100 பேரின், குறிப்புகளை பதிவேற்றம் செய்யவேண்டும். ஆனால், சர்வர் அடிக்கடி பழுதாகி விடுவதால், பதிவேற்றும் பணி முற்றிலும்முடங்கியது. இதனால், ஒரு நாளுக்கு, 40 பேரின் விவரங்கள் தான் பதியமுடிகிறது. இதனால், வரும், 31ம் தேதிக்குள், பணி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது என, ஒரு கணினி ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment