Wednesday, 30 January 2013

அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்க புது முயற்சி



                  அரசு, ஊராட்சிப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஒவ்வொரு ஆசிரியரும், தலா 5 மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன; கிராமங்கள் தோறும் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்
பள்ளிகள் உள்ளன. மாவட்ட மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட ஆங்கில மோகத்தால், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். விளைவு, அரசு, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறதுஏகபட்ட வசதிகள்அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயல் வழிக்கற்றல், சமச்சீர் கல்வி முறையில் கல்வி போதிக்கப்படுகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவ, மாணவியரை உருவாக்கும் நோக்கில், கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளும், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில் கீழ் செய்து கொடுக்கப்படுகின்றன. பள்ளி கட்டடங்களுக்கு தேவையான தளவாட சாமான்கள், இருக்கை, புதிய வகுப்பறை கட்டடம் என, அனைத்தும் பூர்த்தி செய்து கொடுக்கப்படுகின்றன; இருப்பினும், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வதில்லை.
ஆசிரியர்களுக்கு அறிவுரை
           வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வ சிக்ஷ அபியான் திட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தா கூறியதாவது:அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் துவங்கி நோட்டு புத்தகம், சீருடை, மதிய உணவு முதல் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வரை அனைத்து இலவசமாக வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் மிகச்சிறந்த கல்வியை பெற வேண்டும், என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கல்வி போதிக்கப்படுகிறது; தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். வரும் கல்வியாண்டில், 1 - 8ம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், தலா 5 மாணவ, மாணவியரை தங்கள் சார்பில் பள்ளிகளில் சேர்க்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள வீடுகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் வீடுகள், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பெற்றோருடன் கலந்து பேசி, கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, வசந்தா கூறினார்
.

No comments:

Post a Comment