Thursday, 28 March 2013

ஏப்ரல் 5-ம் தேதி முதல்கட்ட தேர்தல் 5855 கூட்டுறவு சங்கத்துக்கு நாளை வேட்பு மனு தாக்கல்



                தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 16 ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இணை பதிவாளர், இதர செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், மாநில அளவிலான கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
தவிர, எஞ்சியுள்ள 22,192 சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 5,855 சங்கங்களுக்கு ஏப்.5ம் தேதி தேர்தல் நடக்கிறது.
                              
சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை இணை பதிவாளர் மற்றும் துணை பதிவாளர்கள், துணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் மொத்தம் 1293 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் மொத்தம் 12.48 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில், மாவட்ட அளவிலான மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை, கூட்டுறவு அச்சகம், கூட்டுறவு ஒன்றியம் ஆகிய 4 அமைப்புகளை தவிர எஞ்சியுள்ள 1289 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
                                      
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக மொத்தம் 323 சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடக்கிறது. நாளையே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, தகுதி வாய்ந்த வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஓட்டுச்சீட்டு முறையில் வாக்கு பதிவு நடத்தப்படுகிறது. வாக்கு பதிவு இருப்பின், ஏப்.9ம் தேதி ஓட்டுகள் எண்ணப் பட்டு, அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்.
                        
இந்த தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை நடக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு மூன்று மாதங்கள் முன்பு வரை சங்கத்தில் கடன் வாங்கியிருந்து, தவணை தவறியிருக்க கூடாது. மேலும், அபராதம் அல்லது குற்றவியல் தண்டனைக்கு ஆளானவர்கள், எழுதப்படிக்க தெரியாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்றனர்
.

No comments:

Post a Comment