மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில்
உள்ளனர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 9ம் தேதி, லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம், கலை கல்லூரிகளும், கடந்த, 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகளுக்கு, கடந்த, 18ம் தேதியும் காலவரையற்ற விடுமுறையை அரசு அறிவித்தது. கல்லூரி விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி தேர்வுகளும், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டும், மாணவர்கள் ஒன்றிணைந்து, அமைப்புகளை உருவாக்கி, கடந்த, 14 நாட்களாக போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், நேற்று மாணவர்கள் சார்பில் எந்தவித போராட்டங்களும் நடைபெறாத நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, எஸ்.எம்.எஸ்., மூலம், மாணவர்களிடையே, பரபரப்பாக செய்தி பரவியது.
உயர்கல்வி துறை தரப்பில், கல்லூரி திறப்பு குறித்து நேற்று வரை, எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், எஸ்.எம்.எஸ்., குழப்பத்தால், இன்று கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் கல்லூரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூலம், மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்து செய்திகள் சேகரிக்கப்பட்டு, உயர்கல்வி துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும், மாணவர்களின் போராட்ட நிலவரங்களை, உயர்கல்வி துறை விசாரித்து வருகிறது. மாணவர்களின் போராட்டங்கள் தணிந்துள்ள நிலையில், கல்லூரி திறப்பு குறித்து, உயர்கல்வி துறை விவாதித்து, இன்று முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment