Saturday, 30 March 2013

விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை



                      "விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் அருகே, 10ம் வகுப்பு விடைத் தாள்கள்,
ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்திய, சி..., ஜோசப் அந்தோணிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பி.முட்லூர் தேர்வு மையத்தில், 545 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு பாக்கெட்டில், 15 விடைத் தாள்கள் வீதம் வைக்கப்பட்டது. 545 விடைத் தாள்களையும், மூன்று பண்டல்களாக பிரித்து, மலைக்கோட்டை ரயிலில் அனுப்பப்பட்டது. அதில், 177 விடைத் தாள்கள் கொண்ட பண்டல், கீழே விழுந்து சேதமடைந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.
                      விடைத் தாள்கள் சேதமடையவில்லை. எரிக்கப்பட்டதாக கூறுவது குறித்து எதுவும் தெரியவில்லை; விசாரணை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், "விருத்தாசலத்தில் 10ம் வகுப்பு விடைத் தாள் சேதமடைந்தது குறித்து, முழுமையான விவரங்கள் கிடைத்ததும், உரிய முடிவு எடுக்க, அறிவிக்கப்படும்" என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், நேற்று இரவு கூறினார்.
                        இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு தமிழ் விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை. ரயிலில் கட்டுகளை அனுப்பும் போது, என்ன நடந்தது என்பது குறித்து, முழுமையான விவரம் கிடைக்கவில்லை. அனைத்து விடைத்தாள்களும் சேதமடைந்ததா அல்லது ஒரு சில விடைத்தாள்கள் சேதமடைந்ததா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும். கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். முடிவு கிடைத்ததும், இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்; சேதமடைந்திருந்தால், இதற்கு முன், அதன் அடிப்படையில், உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment