ஊதிய மாற்றம் குறித்து தற்போதைய ஆட்சியில் கிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு
குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். சிதம்பரத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.அதுபோன்று பதவி உயர் பெற்றதும் பென்ஷன் இழந்து நிற்கும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மானியத் தொகையை ரொக்கமாக வழங்குவதை நடைமுறைப்படுத்தக் கூடாது. அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளைத் தவிர்க்க பொதுவிநியோகத் திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் நூறு சதவீத கணினிமயமாக்க வேண்டும். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை மேலும் வலுமைப்படுத்தி, விரிவுப்படுத்த வேண்டும். அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களின்றி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடை மூலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
11 சிமென்ட் கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து 2 ஆண்டுகளில் செய்யக் கூடிய உற்பத்தியைக் குறைத்து, தேவையை அதிகரித்து, விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்வதால் மக்கள் கஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசு போட்டியை உறுதி செய்யும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.165 விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு மூட்டை ரூ.330-க்கு விற்கப்படுகிறது. எனவே ரூ.7200 கோடி நிதியை தண்டம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் கடை மூலம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி விரல் ரேகை, விழித்திரை ஆகியவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாதது ஆச்சரியமாக உள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தில் பணியாளர்களை பொறுத்தவரை பொருள்களை இறக்கும்போது போக்குவரத்துக் கட்டணத்தை நிர்வாகமே செலுத்துகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பணியாளர்களிடம் பொருள்கள் இறக்கும்போது மிரட்டி பணம் பெறும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 26 ஆயிரம் ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 4 ஆயிரம் கடைகளும் உள்ளன.
இரண்டு வித பணியாளர்களுக்கும் ஒரே பணிதான். ஆனால் நுகர்பொருள் வாணிபக் கழக மூலம் இயங்கும் ரேஷன் கடைப் பணியாளருக்கு ரூ.15 ஆயிரம் அடிப்படை ஊதியம். ஆனால் ரேஷன் கடைப் பணியாளருக்கு ரூ.4500 ஊதியம்தான். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக அரசு அறிவிக்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment