Sunday 24 March 2013

தரம் உயராத நடுநிலைப் பள்ளி கல்வியை கைவிடும் மாணவர்கள்!



               திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், இப்பகுதி மாணவர்கள் சிலர் 9ம் வகுப்பை தொடர முடியாமல் படிப்பை கைவிடும்
அவலம் தொடர்கிறது. திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியம் முருக்கம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 1960ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி 2004ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 258 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.
                        
இப்பள்ளியில் 8-ம் வகுப்பை முடித்த மாணவ, மாணவிகள், 9-ம் வகுப்பைத் தொடர சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மணலூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு மற்றும் போதிய போக்குவரத்து வசதியின்மை காரணமாக சில மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்க இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இக்கிராம மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
                              
இதுகுறித்து இக்கிராம ஊராட்சித் தலைவர் .கருணாகரனிடம் கேட்டபோது, இப்பள்ளியை தரம் உயர்த்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு முன்மொழிவுகள் முறையாக அனுப்பி வைக்கப்படுகிறது. சென்ற 15-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து முன்மொழிவுகள் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு முறையாக மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இருந்தும் இப்பள்ளியை தரம் உயர்த்தாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.
                          
எனவே, மாணவ, மாணவிகள் கல்வியை இடைவிடாது தொடரும் வகையில், இப்பள்ளியை தரம் உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.

No comments:

Post a Comment