மதுரையில் "தினமலர்" சார்பில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன்
பேசியதாவது: கல்வி கற்பதற்கு பணம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக, வங்கிகள் சார்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் "மாதிரி கல்வி கடன் திட்டம்" அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி கற்க அனுமதி பெற்றுவிட்டால் தாராளமாக வங்கிகளை அணுகி மாணவர்கள் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம்.நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால், அவர்களுக்கும் தற்போது வங்கிகள் கடன் வழங்குகின்றன. தகுந்த ஆவணங்கள் இருந்தால், மூன்று முதல் 5 ஆண்டுகள் படிப்பிற்கு ரூ.4 லட்சம் கடன் பெற மாணவர் மற்றும் அவரது பெற்றோர் கையெழுத்து போதுமானது. ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற மாணவர், பெற்றோர் மற்றும் ஒரு ஜாமீன்தாரர் கையெழுத்து தேவைப்படும். ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன் பெற, சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்து வருவாய் ஈட்டும்போது கடனை திருப்பி அடைக்கலாம்.
வெளிநாட்டு கல்விக்கும் வங்கி கடன் வசதி உள்ளது. மேல்படிப்பிற்கும் கடன் பெறலாம். கடன் வழங்குவதை வங்கிகள் கடமையாக கருதுகின்றன. மாவட்டம்தோறும் முன்னோடி வங்கிகள் சார்பில் குறைதீர் மையங்கள் உள்ளன. கல்வி கடன் தொடர்பாக அந்த மையத்திற்கு சென்று மேலும் விவரங்களை பெற்றோர் கேட்டு தெரிந்துகொள்ளலாம், என்றார். "பட்டங்கள் சார்ந்து இல்லாமல், எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள் சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்" என, சென்னை கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் ரமேஷ் பிரபா கூறினார்.
மதுரையில் தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் நிறைவு நாளில், "பிளஸ் 2வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான மேற்படிப்புகள்" குறித்து அவர் நேற்று பேசியதாவது: மருத்துவம், பொறியியல் படிப்புக்களை தவிர, எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஏராளமான படிப்புக்கள் உள்ளன. மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள், இந்திய மருத்துவ படிப்புக்களான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புக்களை தேர்வு செய்யலாம்.
பல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம். நர்சிங் முடித்தவர்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இதுதவிர வேளாண்மை, ஓவியம், இசை, பிலிம் இன்ஸ்டிடியூட், கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், மீன்வளம், ஆடை வடிவமைப்பு, அனிமேஷன், போன்ற உடனடியாக வேலைவாய்ப்பு தரும் படிப்புக்களை தேர்வு செய்து படிக்கலாம். கலை மற்றும் அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களை மாணவர்கள் படிக்கலாம். இந்தியாவில் இந்தாண்டு 28 ஆயிரம் கோடி விளம்பர துறையில் செலவிடப்படுகிறது. எனவே, மாயையான படிப்புகளின் மயங்கி விடாமல், எதிர்காலத்தில் எந்த துறையில் வளர்ச்சி உள்ளது என்பதை அறிந்து துறை சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள். படிக்கும்போதே கூடுதல் கல்வி தகுதிகளை வளர்த்துக்கொண்டால் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்றார்.
No comments:
Post a Comment