Monday, 25 March 2013

பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு



         புதுடெல்லி-பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.
சிபாரிசு
          சிறுசேமிப்பு ஆதாயங்கள், சந்தை மதிப்புக்கு ஏற்ப
இருக்க வேண்டும் என்று சியாமளா கோபிநாத் கமிட்டி கடந்த ஆண்டு சிபாரிசு செய்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டு (2013–2014) தொடங்க உள்ளதால், அந்த ஆண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.
வட்டி குறைப்பு
          அதன்படி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் பொது சேமநல நிதிக்கான (பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்) வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, வருகிற 1–ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. வருகிற நிதி ஆண்டு முழுவதற்கும் இது பொருந்தும்.பொது சேமநல நிதிக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான (என்.எஸ்.சி.) வட்டி விகிதம், 8.5 சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம், 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றம் இல்லை
           அதே சமயத்தில், அஞ்சலகங்களில் ஓராண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட் திட்டங்கள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே 4 சதவீதமாகவும், 8.2 சதவீதமாகவும் நீடிக்கும்.அதுபோல், 5 ஆண்டுகளில் முதிர்வடையும் மாதாந்திர வருவாய் திட்டத்துக்கான வட்டி விகிதத்திலும் (8.4 சதவீதம்) மாற்றம் இல்லை.

No comments:

Post a Comment